Book Review - அழியாத கோலங்கள்

திரு சாருஹாசன் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடைய நடிப்பு மிகவும் அமைதியானதாகவே இருக்கும். அதாவது அவரது கோபம் கூட அமைதியாக இருக்கும். இந்த புத்தகத்தை படித்த பின்பு அவர் ஒரு நல்ல, இயல்பான எழுத்தாளர் என்று புரிந்து கொண்டேன்.

இவருடைய எழுத்து முறை எனக்கு திரு சோ.ராமசாமி அவர்களை நினைவூட்டுகின்றது. மிகவும் இயல்பான எழுத்துக்களும், அதில் தன்னைத்தானே கேலியும், கிண்டலும் செய்து கொண்டும் எழுதும் பாணியும் இந்த நூலுக்கு சரியாக பொருந்தி உள்ளது. யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் சரிசமமாக வாரியுள்ளார்.

இந்த புத்தகத்தில் பல ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. அவர் ஒரு நாத்திகர் என்று எனக்கு தெரியாது. அவர் படங்களை பார்த்து, அவர் மிகுந்த கடவுள் பக்தர் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.😀

ஒன்பது வயதுவரை பள்ளிக்கூடம் செல்லவில்லை. பள்ளிப் படிப்பும் மந்தம். பல கனவுகள், ஆனால் வாழ்க்கையின் முடிவுகளை எதிர்க்காமல், அதன் போக்கிலேயே சென்று மிகவும் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

சாருஷாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர். இவருடைய தந்தை ஒரு காங்கிரஸ்கரர். அம்மாவின் அப்பா ஆங்கிலேய அரசாங்கத்திற்கு வேலை பார்ப்பவர். குடும்பம் ஒரு கழகம் என்பது இவர் குடும்பத்துக் பொறுந்தும். தந்தையைப் போல் மிகப்பெறிய வக்கீல் இல்லையென்றாலும்(உண்மையா என்று தெரியவில்லை. இல்லை தன்னடக்கத்திற்காக சொல்கிறாரா என்று தெரியவில்லை), கிடைத்த வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளார்.

அந்தந்த நேரத்திற்கு அழகான பதில்களை எப்படித்தான் சிந்திக்கிறாரோ மனிதன். பாலச்சந்தர் படம், கமர்ஷியல் படங்கள் போல் போவதில்லை என்ற கேள்விக்கு மிக அழகாக பதில் சொல்லியிருப்பார் பாருங்கள்.. அருமை.

இந்த சுயசரிதையை படிக்கும்போது, இவர் விவரிக்கும் நிகழ்ச்சிகள் உண்மையிலேயே நடந்தனவா என்று எண்ணத்தோன்றுகிறது. உதாரணமாக இவருக்கும் இவர் தந்தைக்கும் 1950களில் நடந்த உரையாடல்.

தந்தை: வெள்ளிக்கிழமையானா, உன் டப்பா காரை எடுத்துட்டுஃ ப்ரெண்ட்ஸை கூட்டிட்டு காணாம போயிடறே? திங்கட்கிழமை கோர்ட்லதான் உன்னை பாக்கறேன். நீ ஸ்மோக் பண்றேன்னு தெரியும். குடிப்பியோன்னு சந்தேகப்படறேன். வேற என்ன பண்றேன்னு எனக்குத் தெரியாது. உனக்கு குடும்பப் பொறுப்பு வரணும்னு ஆசைப்படறேன். மகன்: எனக்கு கல்யாணம், குடும்பம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை!

தந்தை: You need sex…. You are born because your parents had sex….

மகன்: If you are worried about my sex, I know where to find it… and when to find it!

தந்தை: நீயா தேடினா அதுக்குப் பேர் தேவடியாத்தனம்… நாங்க பண்ணி வச்சாத்தான் அதுக்குப்பேர் கல்யாணம்!


இந்தப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தபகுதி இவருக்கும் இவருடைய மனைவிக்கும் நடக்கும் உரையாடல்கள்.

திருமணத்திற்குப்பிறகு மறு வீடு முடிந்ததும் பிறந்த வீடு சென்ற மனைவிக்கு, என் வாழ்க்கையிலேயே முதலும் கடைசியுமான காதல் கடிதம் ஆங்கிலத்தில் எழுதினேன். பதிலே வரவில்லை. சில நாட்களில் மனைவி வந்ததும், லெட்டருக்கு பதில் போடாதது பற்றிக் கேட்டேன். “இருங்க வர்றேன்” என்று சொல்லிப்போனவள், சிவப்பு மையால் நிறைய XXXXXXXகளைக் காண்பித்து “இதென்ன ஸ்பெல்லிங்? கமா, ஃபுல் ஸ்டாப், வெர்ப் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி இது என்ன லவ் லெட்டர்? லவ் எப்படிங்க வரும்?” என்றதும், ‘எழுவாய்… பயனிலை… செயப்படுபொருள் யாது?’ என்று நினைத்து, காதல் கடிதம் எழுதுவதை அன்றைக்கு விட்டவன்… இன்றுவரை எழுதவில்லை.

கமலுக்கும் அவர் மனைவி வாணிக்கும் ஒரு நாள் சண்டை. அப்போது வாணி ஒரு நிகழ்ச்சியை கோடிட்டு காண்பித்து சொல்கிறார் “ஆன் தட் ஒன் கிரவுண்ட், ஐ கேன் டைவர்ஸ் யூ!” . வீட்டின் பெரியவர்களான சாருஹாசனும் அவர் மனைவியும் ‘இருவரையும் சமாதானப்படுத்தி இணைத்துவிட்டதாக’ நம்பி அனுப்பி வைத்துவிட்டு, சாருஹாசன் சீமைச்சாராயத்தை எடுத்துக்கொண்டு, ரவுண்டுகளை ஆரம்பித்தார்.


இவருடைய விளையாட்டுக்கு அளவே இல்லை. கமல் பிறந்தபோது அவர் வாயில் சுருட்டை வைத்துவிட்டு வின்ஸ்டன் சர்ச்சிலின் உருவம் மனதில் தோன்றியது என்கிறார். தம்பி கமலுக்கு சிக்கனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


நகைச்சுவையாக எழுதுவது இவருக்கு இயற்கையாக வருகிறது. அவருடைய திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி

“திருமணத்தில் என் நான்கு அத்தைமார்கள் சுற்றி நின்றார்கள். என் மனைவி வெள்ளைக்காரர்கள் பள்ளியில் படித்ததால், ஒரு நாலைந்து வெள்ளைக்காரிகள் வந்திருந்தார்கள். தாலி கட்டி முடித்ததும் ஒளிந்துகொள்ள முயன்ற என் கையைத் துரத்திப் பிடித்துக் குலுக்கினார்கள். என் நாலு அத்தைகளும் கோரஸாக, கையைத் தொடுராளுகடி என்று ஓலமிட, திருமணம் இனிதே முடிந்தது.”

அந்த கையைத் தொடுராளுகடியைப் படித்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தாயார் சென்னையில் உடல் நலமில்லாமல் இருக்கும்போது, இவருடைய மனைவி சென்னை சென்று மாமியாரைப் பார்த்துக்கொள்வார். அதை அவர் இப்படி விளக்குகிறார்

“நான் போஸ்ட் ஆபீசில் போய் டிரங்க்கால் போட்டு பெஞ்சில் காத்திருப்பேன். லைன் கிடைக்கும்போது மாமியாரும் மருமகளும் எங்கேயாவது ஊர் சுற்றப் போய்விடுவார்கள். சென்னையில் வீட்டு வேலை பார்க்கும் பெண்மணி போனில் “இன்னாபா சொல்ல? யார் கைலே சொல்ல?” என்பார். “கையிலேயும் சொல்ல வேண்டாம், காலிலேயும் சொல்ல வேண்டாம்” என்று கோபமாக போனை வைத்தால் எங்க போஸ்ட் மாஸ்டர் புலம்புவார் “வக்கீல் ஸார்! பொண்டாட்டியோட போன்ல சண்டை போடுங்க… வேணாங்கலை! ஆனா, போன் மத்திய சர்க்கார் சொத்து. உடைஞ்சா காசு கொடுக்கணும்”


அவர் திருமணம் செய்து கொண்ட காரணத்தை இப்படி கூறுகிறார்.

சொந்த முயற்சியில் ஒரு பெண்ணைத்தேடி காதல் செய்யும் வீரம் எனக்கு இல்லை. பெற்றவர்கள் செய்து வைக்கும் திருமணத்திற்கு சம்மதித்தால், தந்தை - தாயிடம் நல்ல பெயர் கிடைக்கும். இது லாபம்தானே என்று அன்று தோன்றியது. ஆனால் காதல் திருமணம், தானே தேளைத் தேடி கொட்டு வாங்கப்போவது போல!

டி.ராஜேந்தரைப் பற்றி இப்படிச் சொல்கிறார். கையில் ஒரு துண்டுக் காகிதம் கூட இல்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் தலைக்குள் வைத்துக்கொண்டு வரும் இயக்குனர் இவரைத் தவிர உலக அளவில் யாருமே இல்லை.

கிரீஷ் காசரவல்லி என்ற இயக்குனரிடம் டி.ஆர் படம் எடுக்கும் விதம் பற்றிக்கூற, அந்த இயக்குனர் டி.ஆரின் தயாரிப்பு முறை பற்றி தான் ஒரு குறும்படம் எடுக்க அவர் அனுமதி கேட்டார். டி.ஆர் அதற்கு என்னிடம் சாரண்ணே... எல்லாரும் ஒரு வழியாகப் போய்க்கொண்டிருக்கும்போது அந்த விதிமுறைகளை மீறி வெற்றி பெறுபவன் மீது கோபத்தை அடக்கி வைத்திருப்பார்கள். எங்கேயாவது நம்ம கால் தடுமாறும்போது ஈஸியா காலை வாரி விடிவாங்க! நான் இன்னும் நிறைய படம் பண்ணணும். என்னை வச்சு படம் பண்ணா அது மிஸ் ஃபயர் ஆகிடும்

விட்டால் இந்த புத்தகத்தையே நான் இங்கே எழுதி விடுவேன். அவ்வளவு சுவையான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது. கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம்.

வெளியீடு : சூரியன் பதிப்பகம் 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை – 600 004. போன் : 42209191 extn : 21125. மொபைல் : 7299027361